Monday, May 10, 2010

வயிற்றெரிச்சல்


வறுமை காணாத வருமானம்
கணவனுக்கு,
கோயிலுக்கே வந்தாலும் கழுத்தை விட்டு இறங்காத
நகைகள் மனைவிக்கு,
நினைத்தவுடன் வந்து சேரும் புத்தம் புது
பொருட்கள் வீட்டுக்கு,
ஆள் நடமாடும் தெருவிலும் விருட்டென போகும்
வாகனம் திமிருக்கு,
அனைவரும் வியக்கும் அளவு அபரீத
முன்னேற்றம் அவர்களுக்கு,
இருந்தும் அக்கம் பக்கத்தில் துரும்பே வாங்கினாலும்
போவார்கள் மாந்திரீகத்துக்கு!

நட்சத்திரங்களுள் நாம்

வட்டநிலா அழகுதான்,
வளம் கொண்ட நட்சத்திரம் இல்லாவிடினும்,
ஓராயிரம் தாரகைதான் ஒரு வானில் வீற்றிருப்பினும்,
ஒற்றைச் சந்திரன் ஒளியை மிஞ்சிவிடுமோ?

வட்ட வட்டமாய் ஆயிரம் நிலாக்கள்,
ஒரு வானம் சேர்ந்தாலும்,
கண்கள்தான் காண சகிக்குமோ?

வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கென கோணங்கள்
நிலையில்லாயிருக்கும்,
நட்சத்திரம் இல்லாவிடில் வானம்தான்,
முழுமைபெறுமோ?

இதில் நிலாக்களாய் பிறர் இருக்கலாம்,
நட்சத்திரங்களுள் நாமிருக்கலாம்,

தாழ்வெண்ணம் வேண்டாம்,
பெருமிதம் கொள்ளுங்கள்,
பூமிக்கு விளக்காய்
நாமும் இருந்திருக்கிறோம்.

தமிழ்

தமிழா,தமிழா......தமிழா திகைத்துப் போனாயோ?
அழைத்தக் குரலில் அறியாதொரு மொழிக்கேட்டாயோ?
அறிந்தே அறியாதவன் போல் சென்றாயோ?
எதற்கையா மேடைக்கூத்தாடிப் போல் தினமொரு நாடகம்?
உண்மையாய் ஒரு விடயம் சொல்கிறேன்,
எச்சில் பட்டு நுனிநாக்கு நனைப்பதல்லவே மொழி,
உன்னைக் காக்கும்,உன் பரம்பரைக் காக்கும்,
உன் மானம் நழுவாமல் தமிழது காக்கும் – தமிழனே
வேடம் களை,தொன்மைத் தொட்ட தமிழைத் திளை,
அவசியமில்லை உன் உரிமைக்கு உதிரம் நரபலி நாளை.

உயிர் கொடுங்கள் உங்கள் இலட்சியங்களுக்கு

வெறும் சதை போர்த்திய இப்பூத உடல் மட்டும் மனிதனாக முடியுமா?பதில் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது.பகுத்தறிந்து வாழ்க்கையை நிர்ணயிக்கத் தெரியாத ஒருவன் மனிதனாக வாழ்ந்துதான் என்ன பயன் விளையப்போகிறது.அவன் எதற்கும் உபயோகமற்ற சடப்பொருளாகத்தான் பார்ப்பவர் கண்களுக்குத் தெரிவான். ஒருவனை முழுமைப்பெற்ற மனிதனாக்குவது இலட்சியங்களே.இலட்சியங்கள் தாம் அவரவர் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.வாழ்ந்தற்கான அடையாளமும், வாழ்வற்கான உந்துதலும் நம் இலட்சியங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன.

இலட்சியங்களை நோக்கிப் பயணிக்கும் வேளையில் சூழும் எதிர்ப்புகள் யாவும் நம்மை மேன்மேலும் பண்பட்ட மனிதனாக்கும்.நம்மில் பலர் வாய் வார்த்தைகளால் அடுத்தவரை வறுத்தெடுப்பவர்களுக்கு அஞ்சி,இன்னும் கொத்தடிமைகளைப் போல் வாழ்ந்து வருகின்றனர்.எல்லோரும் அவரவர்களுக்குத் தெரிந்த்தைத்தான் சொல்வார்கள்,செய்வார்கள்.அதற்காக கோவில் மாட்டைப்போல் தலையாட்டிக்கொண்டு,அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராயாமல் உடனே செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை.ஆயிரம் பேர் ஆலோசனைச் சொன்னாலும் இறுதி முடிவு நம்முடையதாகத்தான் இருக்க வேணடும்.நாளை ஆலோசனைச் சொன்னவர்கள் யாரும் அதன் விளைவைச் சந்திக்கப் போவதில்லை,நாம் தான் மனக்குழப்பத்திலும் பல்வேறு பிரச்சினைகளிலும் சிக்கித்தவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இவற்றைத் தவிர்க்க நமக்கு தேவை திடமான மனதும் தீர்க்கமான இலட்சியமும்தான்.மற்றவர்கள் உங்கள் முளையைச் சலவைச் செய்ய அனுமதிக்காதீர்கள். எடுத்த முடிவில் பிடிவாதமாக இருங்கள். அவர் சொன்னார் இவர் சொன்னாரென்று உங்கள் முடிவை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்.அது நீங்கள் கொணேடிருக்கும் இலட்சியத்தில் தளர்வை ஏற்படுத்தும்.உங்கள் முன்னேற்றம் இரண்டடி தூரத்திலிருக்கும் போது,அதை ஒரு மைல் தூரத்திற்குத் துரத்தியடிக்க இதைத் தவிர மிகச் சிறந்த வழி வேறொன்றம் தேவையில்லை.இது ஒன்றே போதும்.தன்னைத்தானே கல்லில் கட்டிக்கொண்டு பசிபிக் சமுத்திரத்தில் மூழ்கிய கதைதான். இரவிந்திரநாத் தாகூரின் கவிதைகளைத் தம் மாணவர்களிடம் கொடுத்து பிழைதிருத்தம் செய்யச் சொன்னார்களாம் சில வங்காள ஆசிரியர்கள்.பின்னாளில் இவர்களே இரவிந்திரநாத் தாகூருக்கு ஆசியாவிலே முதன் முறையாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைக்கப்பெற்றதும் அவரைப் போற்றிப் புகழ்ந்தனராம்.

இப்படித்தான் நம் இலட்சியங்களுக்குப் பலர் முட்டுக்கட்டையாக இருப்பார்கள்.
அதற்கெல்லாம் துளியளவும் மசியாதீர்கள்.ஆயிரம் தடவைச் சிந்தியுங்கள். ஆணித்தரமாய் முடிவெடுங்கள்.அதன்படியே செயல்படுங்கள்.ஆழிக்காற்றே வீசினாலும் முயற்சியை கைவிடாதிர்கள்.இக்கணமே உயிர் கொடுங்கள் உங்கள் இலட்சியங்களுக்கு, நாளை உலகம் புகழும் நீங்கள் உன்னதமான மனிதரென்று.