Monday, May 10, 2010

உயிர் கொடுங்கள் உங்கள் இலட்சியங்களுக்கு

வெறும் சதை போர்த்திய இப்பூத உடல் மட்டும் மனிதனாக முடியுமா?பதில் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது.பகுத்தறிந்து வாழ்க்கையை நிர்ணயிக்கத் தெரியாத ஒருவன் மனிதனாக வாழ்ந்துதான் என்ன பயன் விளையப்போகிறது.அவன் எதற்கும் உபயோகமற்ற சடப்பொருளாகத்தான் பார்ப்பவர் கண்களுக்குத் தெரிவான். ஒருவனை முழுமைப்பெற்ற மனிதனாக்குவது இலட்சியங்களே.இலட்சியங்கள் தாம் அவரவர் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.வாழ்ந்தற்கான அடையாளமும், வாழ்வற்கான உந்துதலும் நம் இலட்சியங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன.

இலட்சியங்களை நோக்கிப் பயணிக்கும் வேளையில் சூழும் எதிர்ப்புகள் யாவும் நம்மை மேன்மேலும் பண்பட்ட மனிதனாக்கும்.நம்மில் பலர் வாய் வார்த்தைகளால் அடுத்தவரை வறுத்தெடுப்பவர்களுக்கு அஞ்சி,இன்னும் கொத்தடிமைகளைப் போல் வாழ்ந்து வருகின்றனர்.எல்லோரும் அவரவர்களுக்குத் தெரிந்த்தைத்தான் சொல்வார்கள்,செய்வார்கள்.அதற்காக கோவில் மாட்டைப்போல் தலையாட்டிக்கொண்டு,அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராயாமல் உடனே செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை.ஆயிரம் பேர் ஆலோசனைச் சொன்னாலும் இறுதி முடிவு நம்முடையதாகத்தான் இருக்க வேணடும்.நாளை ஆலோசனைச் சொன்னவர்கள் யாரும் அதன் விளைவைச் சந்திக்கப் போவதில்லை,நாம் தான் மனக்குழப்பத்திலும் பல்வேறு பிரச்சினைகளிலும் சிக்கித்தவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இவற்றைத் தவிர்க்க நமக்கு தேவை திடமான மனதும் தீர்க்கமான இலட்சியமும்தான்.மற்றவர்கள் உங்கள் முளையைச் சலவைச் செய்ய அனுமதிக்காதீர்கள். எடுத்த முடிவில் பிடிவாதமாக இருங்கள். அவர் சொன்னார் இவர் சொன்னாரென்று உங்கள் முடிவை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்.அது நீங்கள் கொணேடிருக்கும் இலட்சியத்தில் தளர்வை ஏற்படுத்தும்.உங்கள் முன்னேற்றம் இரண்டடி தூரத்திலிருக்கும் போது,அதை ஒரு மைல் தூரத்திற்குத் துரத்தியடிக்க இதைத் தவிர மிகச் சிறந்த வழி வேறொன்றம் தேவையில்லை.இது ஒன்றே போதும்.தன்னைத்தானே கல்லில் கட்டிக்கொண்டு பசிபிக் சமுத்திரத்தில் மூழ்கிய கதைதான். இரவிந்திரநாத் தாகூரின் கவிதைகளைத் தம் மாணவர்களிடம் கொடுத்து பிழைதிருத்தம் செய்யச் சொன்னார்களாம் சில வங்காள ஆசிரியர்கள்.பின்னாளில் இவர்களே இரவிந்திரநாத் தாகூருக்கு ஆசியாவிலே முதன் முறையாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைக்கப்பெற்றதும் அவரைப் போற்றிப் புகழ்ந்தனராம்.

இப்படித்தான் நம் இலட்சியங்களுக்குப் பலர் முட்டுக்கட்டையாக இருப்பார்கள்.
அதற்கெல்லாம் துளியளவும் மசியாதீர்கள்.ஆயிரம் தடவைச் சிந்தியுங்கள். ஆணித்தரமாய் முடிவெடுங்கள்.அதன்படியே செயல்படுங்கள்.ஆழிக்காற்றே வீசினாலும் முயற்சியை கைவிடாதிர்கள்.இக்கணமே உயிர் கொடுங்கள் உங்கள் இலட்சியங்களுக்கு, நாளை உலகம் புகழும் நீங்கள் உன்னதமான மனிதரென்று.

No comments:

Post a Comment